Friday, April 22, 2011

HAVE MERCY!



கடவுளே, கருணை வை!
கொஞ்சம் கண்ணீரைக் கேட்கிறேன்.
கனத்த இதயத்துக்குள்
கல்லறையாகும் உணர்வுகளுக்காய்
கன நேரம் நான் அழவேண்டும்.

உணர்வுகள் ஊமையாகிப் போவதில்லை
உள்ளத்தை ஊனமாக்கிப் போகின்றன.
புரிதலைத் தேடி, மனம் புண்ணாகி வீழ்கின்றது.
வெளியேற்ற வழியின்றி வீங்கிப் போகின்றது.

அன்பிருன்தென்ன!
அன்பர்கள் இருந்தென்ன!
அமைதியில்லை, ஆறுதலில்லை!
தொலைதூரத்தில் தொலைந்து போகின்றேன்.

அவர்கள் இருக்கின்றார்கள் 
என்று இவர்கள் இருக்க;
இவர்கள் இருக்கின்றார்கள் 
என்று அவர்கள் இருக்க;
இறுதியில் எனக்கு
எவருமில்லை என்பது
உனக்கு மட்டுமாவது தெரியுமா?

உன்னை மறந்து விட்டு
என்னை ஏன் மறந்தாய் என்று
நான் வாதிடுவது வாடிக்கைதான்!

அருகிருக்கும் கரம் கேட்கவில்லை
அரவணைக்கும் மனம் கேட்கிறேன்.
உடனிருக்கும் வரம் கேட்கவில்லை
உணர்த்துகின்ற உளம் கேட்கின்றேன்.

கிடைக்காததை கேட்பது கேலிக்குரியது - ஆனால்
நடக்காததை நினைப்பது நடக்கின்றதே!
கானல் நீராய் நான்
கனவுலகில் சஞ்சரிக்க விரும்பவில்லை.
கன நேரம் வாழ்ந்தாலும்
உன் கண்களுக்குள் வாழவேண்டும்.

எனவே,
நீ மட்டும் என்னை மறந்துவிடாதே,
பிறகு எல்லாமே மடிந்துபோயிருக்கும்.

No comments:

Post a Comment